செய்திகள்

மும்பை-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: குஜராத் நகை வியாபாரி கைது

Published On 2017-10-30 12:08 GMT   |   Update On 2017-10-30 12:08 GMT
மும்பையிலிருந்து இன்று டெல்லி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய நகை வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
அகமதாபாத்:

மும்பையில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 9W339 என்ற விமானம் பயணிகளுடன்  சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் உள்ள கழிவறையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், கடத்தல் காரர்களால் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரமாக அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்ட விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் அதிகாலை 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது.



விமான பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். விமானத்திற்கு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி அழைப்பின் பேரில் விமானம் தரையிறக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜாபதி தெரிவித்தார். அவர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த நபர் அதே விமானத்தில் பயணம் செய்த  தற்போது மும்பையில் வசிக்கும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரி பிர்ஜு சல்லா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிர்ஜூ இதற்கு முன் இது போன்று ஜெட் ஏர்வேசிற்கு மிரட்டல் விட்டுள்ளார். அவரை போலீசார் விமானநிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  பிர்ஜூ ஏர்வேஸ் மீதுள்ள பகையினால் இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News