செய்திகள்
படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்தனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

Published On 2017-08-31 10:55 IST   |   Update On 2017-08-31 10:55:00 IST
திருமலை அடுத்த பாபவிநாசனம் செல்லும் சாலையில் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமலை:

‘பாம்பு’ என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதேபோல், திருப்பதி- திருமலையில் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மலைப்பாம்புகள், கொடிய வி‌ஷம் உள்ள பாம்புகள் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருமலையை அடுத்த பாபவிநாசனம் செல்லும் சாலையில் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபம் அருகில் பக்தர்கள் அதிகமாக நடமாடி கொண்டிருந்த பகுதியில் கொடிய வி‌ஷம் உள்ள நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அந்தப் பாம்பை பார்த்த புரோகிதர்கள், தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கர்நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு, பக்தர்கள் கூட்டத்தினிடையே படமெடுத்து ஆடிய நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டார்.

மேலும் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் முகாம் அலுவலகத்தில் 5 அடி நீளத்தில் பாம்பு ஒன்று நுழைந்திருந்தது. அந்தப் பாம்பையும் பிடித்து அவர் காட்டில் கொண்டு போய் விட்டார்.

பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அடிக்கடி மலைப்பாம்புகள், கொடிய வி‌ஷம் உள்ள பாம்புகள் புகுந்து விடும் சம்பவத்தால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Similar News