செய்திகள்

அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும்: பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

Published On 2017-07-06 19:25 IST   |   Update On 2017-07-06 19:25:00 IST
அருணாசலப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இடாநகர்:

ஜனாதிபதி பதவிக்கு ஜூலை 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதையடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் இன்று அருணாசலப்பிரதேசம் சென்றார். அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க. சார்பில் தலைநகர் இடாநகரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் பேசுகையில், ’’ஜனாதிபதி பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களையும் சமமாக கருத வேண்டும். அனைத்து மாநிலங்களையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும். எந்த கட்சியையும் சார்ந்து இருக்கக் கூடாது. ஓட்டு வங்கியை முக்கியமாகக் கருதாமல், அரசை 
முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும் என்பதே எனது கனவு. அருணாசலப் பிரதேச மாநில மக்களில் ஒருவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Similar News