செய்திகள்

வளர்ந்த நாடுகளின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பட்டியல்: நம்பர் ஒன் இடத்தில் ‘தி கிரேட் இந்தியா’

Published On 2017-07-01 14:24 IST   |   Update On 2017-07-01 14:24:00 IST
இந்திய மக்களின் இதயங்களில் ‘ஜி.எஸ்.டி.’ என்ற மூன்றெழுத்து பேரிடி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வளர்ந்த நாடுகளின் வரி விதிப்பு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ள விபரம் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் தொடர்பாக நள்ளிரவு வேளையில் பாராளுமன்றம் விழா எடுத்து கொண்டாடினாலும், பெரும்பாலான இந்திய மக்களின் இதயங்களில் ‘ஜி.எஸ்.டி.’ என்ற மூன்றெழுத்து பேரிடி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வளர்ந்த நாடுகளின் வரி விதிப்பு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ள விபரம் தெரியவந்துள்ளது.



தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. எனப்படும் புதிய வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இணைந்து ஜி.எஸ்.டி.யை தொடங்கி வைத்தனர்.



முன்னதாக ஜி.எஸ்.டி.யின் விரிவாக்கம் சரக்கு மற்றும் சேவை வரியாக (Goods and ServiceTax) இருந்து வந்த நிலையில், இனி சரக்கு மற்றும் எளிய வரியாக (Goods and Simple Tax) மாற்றப்பட்டது.

புதிய வரி முறை நாடு முழுக்க பொருட்களுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கும். இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு புதிய வரி முறை உதவிகரமாக இருக்கும். இந்திய ரெயில்வேயை போல் மத்திய மாநில அரசுகள் இணைந்து கையாளும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய வரிமுறை அமல்படுத்தப்பட்டதை வரவேற்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போதும், சில பகுதிகளில் புதிய வரிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும், நடுத்தர மக்களின் பொருளாதாரத்தில் இந்த புதிய வரி விதிப்பு முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.



அதிலும், உலக நாடுகளில் உள்ள சரக்கு சேவை வரி விதிப்பு சதவீதத்தை விட இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஜி.எஸ்.டி. முறையில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக வரி விதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

ஆங்கில அகரவரிசை முறைப்படி, எந்தெந்த நாடுகளில் அதிகபட்சமாக எத்தனை சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது? என்பதை இங்கு பார்ப்போம்.

ஆஸ்திரேலியா - 10%
பஹ்ரைன் - 5%
கனடா - 15%
சீனா - 17%
ஜப்பான் - 8%
கொரியா - 10%
குவைத் - 5%
மலேசியா - 6%
மொரிஷியஸ் - 15%
மெக்சிகோ - 16%
மியான்மர் - 3%
நியூசிலாந்து - 15%
பிலிப்பைன்ஸ் - 12%
ரஷிய கூட்டமைப்பு நாடுகள் - 18%
சிங்கப்பூர் - 7%
தென்னாப்பிரிக்கா - 14%
தாய்லாந்து - 7%
ஐக்கிய அரபு அமீரக நாடுகள் - 5%
அமெரிக்கா - 7.5%
வியட்நாம் - 10%
ஜிம்பாப்வே  - 15%

நமது இந்தியா - 28%


சமச்சீரான வரி விதிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருதி இந்த புதிய வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும், இதன் நேரடி தாக்கம் அடுத்த சில மாதங்களில் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்க்கை செலவினங்களையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று பலதரப்பினரும் கருதுவதில் நியாயம் இல்லாமல் இல்லை என்பதை இந்த தருணத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

Similar News