செய்திகள்

ரொட்டி திருடியதாக கைதியின் பெண்ணுறுப்பில் லத்தியை சொருகி.. : மும்பை சிறையின் கோர முகம்

Published On 2017-07-01 07:09 GMT   |   Update On 2017-07-01 07:09 GMT
ஷீனா போரா கொலைவழக்கில் கம்பி எண்ணும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள மும்மை பைகுலா சிறையில் முட்டை மற்றும் ரொட்டி திருடியதாக கூறி கைதியின் பெண்ணுறுப்பில் லத்தியை சொருகி சிறை அதிகாரிகள் சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை:

மராட்டியம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான மஞ்சுளா ஷெட்டி என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்து
மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மஞ்சுளா பைகுலா சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஞ்சுளா ஷெட்டி கடந்த 24-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.

தற்போது, மஞ்சுளா ஷெட்டி மரணம் குறித்து அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி காலை சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் 2 முட்டைகள் மற்றும் 5 ரொட்டிகள் காணமல் போயுள்ளன. இது தொடர்பாக சிறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் மஞ்சுளாவை தனியறையில் வைத்து விசாரித்துள்ளனர்.



ரொட்டி காணமல் போனது குறித்து தனக்கு தெரியாது என மஞ்சுளா ஷெட்டி கூறியுள்ளதால், ஆத்திரமடைந்த சிறைக் காவலர்கள் மஞ்சுளாவின் பெண்ணுறுப்பில் லத்தியைச் சொருகி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர், பின்னர், அவரை சிறிதும் கண்டு கொள்ளாமல் அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர் அந்த கல்நெஞ்ச காவலர்கள். அதிகமான ரத்தம் வெளியான நிலையில் மயங்கி கிடந்துள்ள மஞ்சுளா சக கைதிகளால் சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சிறை மருத்துவமனையில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாததால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மஞ்சுளா கொண்டு
செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.



இந்த செய்தி அனைத்து கைதிகளிடையே காட்டுத்தீயாக பரவியதையடுத்து, சுமார் 200-க்கும் அதிகமான கைதிகள் பைகுலா சிறையில் கையில் கிடைத்த பொருட்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகளவிலான போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கைதிகளின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதில், ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகியுள்ள ஊடக தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட கைதிகள் மீது சிறையில் கலவரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், மஞ்சுளா சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறை அதிகாரி மற்றும் ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்கு நாக்பாதா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறை என்பது தவறிழைத்தவர்கள் மனம் திருந்தி வாழ ஒரு இடமாக இருக்கும் என்ற நிலை மாறி, பொறுப்பில் உள்ள அதிகாரிகளே மனித உரிமைகளை பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் கைதியை இப்படி நடத்தியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Tags:    

Similar News