செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஸ்ரீநகரில் வெற்றி பெற்ற பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

Published On 2017-04-15 17:33 GMT   |   Update On 2017-04-15 17:33 GMT
தேர்தலை அமைதியான முறையில் நடத்த தவறிவிட்டதால், ஜம்மு காஷ்மீரில் அரசாங்கத்தை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஸ்ரீநகரில் வெற்றி பெற்ற பரூக் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியானார்கள். வன்முறை காரணமாக 7.13 சதவீத ஓட்டுகளே பதிவானது. இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கானும் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், பரூக் அப்துல்லா 48554 வாக்குகள் பெற்று, 10 ஆயிரத்து 775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் நசீர் அகமது கான் 37779 வாக்குகள் பெற்றார். இந்த வெற்றி ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


ஸ்ரீநகர் வெற்றியைத் தொடர்ந்து பரூக் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரை இல்லாத வகையில் இந்த தேர்தல் ரத்தக்கறை படிந்த தேர்தலாக அமைந்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது.

தேர்தலை அமைதியான முறையில் நடத்த தவறிவிட்டதால், இந்த அரசாங்கத்தை ஆளுநரும் ஜனாதிபதியும் கலைத்துவிட்டு  ஆளுநரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான், இதுபோன்ற சூழ்நிலை இனியும் அதிகரிக்காது என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும்.

அதேசமயம், அனந்த்நாக் தொகுதியில் மே 25-ம் தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஆளுநரின் ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு நீதி கிடைக்காது.

ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டி வைத்து கொண்டு செல்வது, மிகவும் அவமானகரமானது, ஜனநாயகத்திற்கு எதிரான மோசமான நடவடிக்கையாகும். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்ந்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News