செய்திகள்

சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்வி: காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் அடங்கிய தேர்தல் குழு

Published On 2017-04-12 09:40 GMT   |   Update On 2017-04-12 09:40 GMT
சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்வி காரணமாக காங்கிரசுக்கு ஆலோசனை வழங்க ராகுல் காந்தி, பிரியங்கா நேரடி கண்காணிப்பில் தேர்தல் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பின் நடந்த சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் படுதோல்வியை தழுவியது.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார்கள். நீண்ட ஆலோசனைக்குப்பின் காங்கிரசில் புதிதாக தேர்தல் மேலாண்மை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.



காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் கண்காணிப்பில் இந்த குழு செயல்படும். இதில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்க கட்சி சார்பற்ற முறையில் தனியார் நிபுணர்கள் இடம் பெற்று இருப்பார்கள்.

இந்த குழுவினர் விளம்பர ஏஜென்சிகளை சேர்ந்தவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரயுத்தி, உள்ளூர் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்குவார்கள்.

உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பிரசாரம் செய்வது, தேர்தல் பணிகளில் ஈடுபடுவது பற்றியும் ஆலோசனை வழங்குவார்கள். மிக நுணுக்கமான அளவில் இவர்களது பணி இருக்கும் என்றும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கூறினார்கள்.

Similar News