செய்திகள்

போராட்டக்காரர்களை கொல்லும் நோக்கில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

Published On 2017-04-10 20:15 IST   |   Update On 2017-04-10 20:15:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களை கொல்லும் நோக்கில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
.புதுடெல்லி:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க, கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு இங்கு தீவிரவாதி புர்ஹான் வானி என்பவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். வன்முறையை ஒடுக்க பாதுகாப்பு படையினர் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர்.



பெல்லட் குண்டுகள் பயன்பாட்டின் காரணமாக 43 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பலநூறு பேர் பார்வை இழக்க நேரிட்டுள்ளது. இதனால், பெல்லட் குண்டுகளின் பயன்பாடு குறித்து தேசிய அளவில் சர்ச்சையும், விவாதமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில 
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்துவருகிறது.

இந்நிலையில், பெல்லட் குண்டுகளுக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களை கொல்லும் நோக்கில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹக்தி இந்த வாதத்தை முன் வைத்தார்.

மேலும், “கடைசி வாய்ப்பாகத்தான் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக ரப்பர் குண்டு உள்ளிட்ட மற்ற மாற்று பயன்பாடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக கடந்த விசாரணைகளில், “வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது பெல்லட் குண்டுகளை பிரயோகிப்பதற்கு பதிலாக கையாளக்கூடிய மாற்று வழி என்ன? என்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என முகுல் ரோஹத்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

Similar News