செய்திகள்

‘அம்மா உணவகம்’ போல் ‘நம்ம கேண்டீன்’: கர்நாடக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

Published On 2017-03-15 07:30 GMT   |   Update On 2017-03-15 07:30 GMT
தமிழ்நாட்டில் உள்ளதைபோல் கர்நாடக மாநிலத்திலும் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க 100 கோடி ரூபாய் செலவில் பெங்களூர் நகரில் ‘நம்ம கேண்டீன்’ எனும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர்:

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் உத்தரவின்படி சென்னையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ‘அம்மா உணவகம்’ திறக்கப்பட்டன. இந்த உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு இட்லியும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும், சாம்பார் மற்றும் கருவேப்பிலை சாதம் வகைகள் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கின்றன. இரவு வேளைகளில் மூன்று ரூபாய் விலையில் இரண்டு சப்பாத்திகள் கிடைக்கும் இந்த திட்டத்துக்கு மக்களிடையே பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில், கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க 100 கோடி ரூபாய் செலவில் பெங்களூர் நகரில் ‘நம்ம கேண்டீன்’ எனும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொருத்து, மாநிலம் முழுவதும் மேலும் அதிகமாக நம்ம கேண்டீன்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News