செய்திகள்

ஏ.டி.எம்.களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப். 1 முதல் நீக்கம்

Published On 2017-01-30 12:23 GMT   |   Update On 2017-01-30 12:23 GMT
வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

இதனையடுத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கு கடந்த 3 மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வங்கி ஏ.டி.எம்-களில் நடப்பு கணக்கு மூலம் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நீக்கம் சேமிப்பு கணக்கிற்கு பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நடப்பு கணக்குகள், பண கடன் கணக்குகள் மற்றும் ஓவர் டிராப் கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் மட்டும் தளர்த்தப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும். 

இருப்பினும் வங்கிகள் தங்களது விருப்பப்படி கட்டுப்பாடு நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாளை மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ.டி.எம்-களில் சேமிப்பு கணக்கு மூலம் ஒரு நாளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் எடுக்க முடியும். அதேபோல் வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் மட்டும் தான் எடுக்க முடியும்.

நடப்பு கணக்கில் தற்போது வரை வாரத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.

Similar News