செய்திகள்

ஆதார் அட்டை மூலம் இனி பணம் செலுத்தலாம்: புதிய திட்டம் வருகிறது

Published On 2017-01-28 07:45 GMT   |   Update On 2017-01-28 07:45 GMT
ஆதார் எண்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனையை மிகவும் எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 14 வங்கிகள் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை எடுத்தது.

இதை தொடர்ந்து ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆதார் எண்களை பயன்படுத்தி பண பரிவர்த்தனையை மிகவும் எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 14 வங்கிகள் ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளன. எனவே இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

தற்போது ஆதார் எண்களை பயன்படுத்தி பணம் வழங்கும் முறை சில பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. ஆந்திராவில் சில வங்கிகள் இந்த திட்டத்தை சோதனை ரீதியில் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து இந்த திட்டம் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஆதார் எண்களை வைத்து பணப்பரிமாற்றம் செய்வதற்கு முதலில் ஒவ்வொருவரது ஆதார் எண்களும் அவரவர் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படுதல் வேண்டும். மொத்தம் 111 கோடி பேரில் இதுவரை 49 கோடி பேர்தான் தங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளனர். தற்போது மாதந்தோறும் தலா 2 கோடி கணக்குகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

முழுமையாக இந்த பணி முடிந்ததும் ரொக்கமில்லா பரிவர்த்தனை மேலும் எளிதாகி விடும். அதன்பிறகு பொது மக்கள் செலவு செய்ய ஸ்மார்ட் போன்களையோ, கார்டுகளையோ எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

ஆதார் எண்களை சொல்லி கைரேகையை பதிவு செய்தாலே போதும், பணப்பரிமாற்றம் நடந்து விடும்.

Similar News