செய்திகள்

பத்மாவதி படப்பிடிப்பில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல்

Published On 2017-01-27 21:03 GMT   |   Update On 2017-01-27 23:37 GMT
ஜெய்ப்பூரில் பத்மாவதி படப்பிடிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜெய்ப்பூர்:

பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவாகி வரும் இப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

ஜெய்ப்பூரில் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலியையும் தாக்கினர்.

செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை 
பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலியின் ‘பத்மாவதி’ என்ற திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும் அலாவுதின் கில்ஜியும் காதல்வயப்பட்டுள்ளதாக சில காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று ராஜ்புத் கர்னி சேனா 

அமைப்பினர் கடும் கண்டனம் எழுப்பி வந்தனர். இப்படிப்பட்ட காட்சிகள் இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்று பன்சாலியை வலியுறுத்தினர்.

“வரலாற்றை தவறாகக் காட்ட வேண்டாம் என்று நாங்கள் பன்சாலியை எச்சரித்தோம். ஷூட்டிங் நடைபெறுவதை அறிந்து இங்கு வந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம்” என்று ராஜ்புத் கர்னி சேனாவைச் சேர்ந்த நாராயண் சிங் தெரிவித்தார்.

இந்த ரகளையை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதோடு, இனி ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு இல்லை என்று படக்குழுவினர் முடிவெடுத்ததாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. 

Similar News