செய்திகள்

சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்கள் கவலைக்கிடம்: விசாரணை நடத்த உத்தரவு

Published On 2016-12-26 06:16 GMT   |   Update On 2016-12-26 06:16 GMT
சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய பக்தர்களில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து கேரள அறநிலையத்துறை மந்திரி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை விழா நடக்கிறது.

மண்டல பூஜையில் பங்கேற்க நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த வாரம் முதல் சபரிமலையில் திரண்டிருந்தனர். அவர்கள் பம்பை முதல் மாளிகைபுரத்தம்மன் கோவில் மற்றும் சன்னிதானம் பகுதியில் கூடியிருந்தனர்.

பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி கடந்த 22-ந்தேதி ஆரன் முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று பிற்பகல் இந்த ஊர்வலம் பம்பையை சென்றடைந்தது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடுகள் நடந்தது.

தங்க அங்கிக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு பம்பையில் இருந்து நேற்று பிற்பகல் முதல் பக்தர்கள் யாரும் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது போல மாளிகைபுரம் பகுதியில் இருந்த பக்தர்களும் சன்னிதானத்திற்கு சென்று விடாமல் இருக்க அங்கு கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தங்க அங்கி ஊர்வலம் மாளிகைபுரத்தை கடந்த போது, தங்க அங்கியை தரிசிக்கவும், 18-ம் படி ஏறவும் முயன்ற பக்தர்களால் மாளிகைபுரம் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பக்தர்களை தடுத்து நிறுத்த போலீசாரால் கட்டப்பட்ட கயிறு அறுந்து விழுந்தது. இதனால் கூடிநின்ற பக்தர்கள் சன்னிதானம் நோக்கி ஓடத் தொடங்கினர்.

அப்போது நெரிசலில் சிக்கி கீழே விழுந்த பக்தர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறி மிதித்து சென்றதால் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு இடுப்பு எலும்பு, முதுகு தண்டு உடைந்தது. அவர்கள் எழுப்பிய அலறல் சத்தத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் மூழ்கியது.

இதையடுத்து விரைந்து வந்த அதிரடி படையினர் பக்தர்களை கட்டுப்படுத்தி, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். அவர்களுக்கு உடனடியாக சன்னிதானத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் பம்பை மற்றும் கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுமார் 40 பக்தர்கள் படுகாயம் அடைந்தது தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த பக்தர்களில் பலர் ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சிகிச்சை பெறுபவர்களை பத்தனம்திட்டா கலெக்டர் கிரிஜா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

சம்பவம் பற்றி மந்திரி கடகம்பள்ளிசுரேந்திரன் கூறும்போது:-

லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தடுப்பை தாண்டி செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக கட்டுப்படுத்தி விட்டனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது, என்றார்.

மேலும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சபரிமலையில் இன்று பகல் 12 மணிக்கு மண்டல பூஜை நடந்தது. அதன்பிறகு மாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அத்துடன் மண்டல பூஜை நிறைவு பெறுகிறது. இதையடுத்து இரவு 10.30 மணிக்கு கோவில்நடை அடைக்கப்படுகிறது.

அடுத்து மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

Similar News