செய்திகள்

மாயமான ஜே.என்.யு மாணவர்: தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம்

Published On 2016-11-28 23:57 GMT   |   Update On 2016-11-28 23:57 GMT
மாயமான ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமது தொடர்பாக தகவல் அளிப்போருக்கு ஊக்கத் தொகை ரூ.10 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை.

இதையடுத்து, காணாமல்போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாயமான மாணவரை போலீஸ் சிறப்புக்குழு அமைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உத்தரவிட்ட போதும், 40 நாட்கள் ஆகியும் இன்னும் மாணவர் நஜீப் கிடைக்கவில்லை.

இதனிடையே, தன்னுடைய மகன் மாயமானது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நஜீப்பின் தாயார் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாயமான ஜே.என்.யு மாணவர் நஜீப் அகமது தொடர்பாக தகவல் அளிப்போருக்கு ஊக்கத் தொகை ரூ.10 லட்சம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி கமிஷ்னர் அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக 50 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் ஒரு லட்சம், 2 லட்சம் என்ற மாற்றி அமைக்கப்பட்டு, கடைசியாக ரூ.5 லட்சமாக இருந்தது.

இந்நிலையில், தற்போது ரூ.5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News