செய்திகள்

ஜனாதிபதி மாளிகை நோக்கி மம்தா தலைமையில் இன்று எம்.பி.க்கள் பேரணி

Published On 2016-11-16 03:39 GMT   |   Update On 2016-11-16 03:39 GMT
புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை திடீரென செல்லாக்காசாக அறிவித்து மக்களை பரிதவிக்க வைத்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க மம்தா பானர்ஜி தலைமையில் பல கட்சியினர் ஒன்று திரண்டுள்ளனர்.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது

கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடந்த ஒருவாரமாக கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மக்களை கொல்லவந்த ஆயுதம் என்றும் இந்த அறிவிப்பை குற்றம்சாட்டியுள்ளார். இந்த அறிவிப்பின்மூலம் கடந்த ஆறு நாட்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பேசிய மம்தா, இந்த நடவடிக்கையால் மக்கள் அடைந்துவரும் துன்பத்தை விளக்கி கூறியதுடன், ஜனாதிபதியுடன் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதுபற்றி விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று ஜனாதிபதியை மம்தா சந்திக்க
நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு வந்த மம்தா பானர்ஜி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பிரதமரின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களுடன் இன்று ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக சென்று மனு அளிப்பது என மம்தா தீர்மானித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான தினேஷ் திவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி தலைமையிலான இந்த பேரணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுங்கட்சியான தேசிய மாநாடு கட்சி மற்றும் பிறகட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது.

இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கேற்பார்களா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Similar News