செய்திகள்

விடுதி தேர்தலில் மோதல்: ஜே.என்.யு. மாணவர் திடீரென மாயம்

Published On 2016-10-16 23:42 GMT   |   Update On 2016-10-16 23:42 GMT
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி தேர்தல் ஒன்றில் இரு தரப்பினரே தகராறு நிலவி வந்த நிலையில், மாணவர் நஜீப் அகமது என்பவர் திடீரென இரண்டு நாட்களாக காணவில்லை.
புதுடெல்லி:

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் நஜீப் அகமது. இவர் முதுகலை பயோ டெக்னாலஜி படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்தார். இவர் அகில இந்திய மாணவர் சங்க அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் மாணவர் நஜீப் அகமதை சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை. முன்னதாக சனிக்கிழமை மாலை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சில மாணவர்களுடன் நஜீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நஜீப்பின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி வசந்த் குஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விடுதி தேர்தல் தொடர்பாக இரு குழுவை சேர்ந்த மாணவர்களிடையே தகராறு நிலவி வந்ததாக தெரிகிறது.

முன்னதாக நஜீப், தன்னை அறையை விட்டு காலி செய்யுமாறு கூறியதற்காக மாணவர் ஒருவரை அறைந்துவிட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏபிவிபி சார்பில் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

இத்தகைய சிக்கலான சூழலில் மாணவன் நஜீப் இரண்டு தினங்களாக காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜே.என்.யு மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Similar News