செய்திகள்

தந்தையின் கனவை நிறைவேற்ற தேர்வு எழுதிய ராணுவ வீரரின் மகள்கள்

Published On 2016-09-21 08:28 IST   |   Update On 2016-09-21 08:28:00 IST
காஷ்மீர் உரி தாக்குதலில் பலியான தந்தையின் கனவை நிறைவேற்ற தேர்வு எழுத வந்த மகள்கள் பற்றிய செய்தி அனைவரது நெஞ்சையும் உருக்கும்வகையில் இருந்தது
கயா:

காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களில் எஸ்.கே.வித்யார்த்தி என்பவரும் ஒருவர். அவர் பீகார் மாநிலம் கயா மாவட்டம் பக்னாரி கிராமத்தை சேர்ந்தவர். அவருக்கு மனைவியும், 3 மகள்களும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

மகள்கள் ஆர்த்தி 8-ம் வகுப்பிலும், அன்ஷு 6-ம் வகுப்பிலும், அன்ஷிகா 2-ம் வகுப்பிலும் படித்து வருகிறார்கள். கயாவில் உள்ள டி.ஏ.வி. பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்து வரும் அவர்களுக்கு நேற்று தேர்வு நாள் ஆகும்.

தந்தையை பறிகொடுத்த துக்கத்துக்கிடையே அவர்கள் பள்ளிச்சீருடையில் தேர்வு எழுத வந்தனர். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. அக்காட்சி, அனைவரது நெஞ்சையும் உருக்கும்வகையில் இருந்ததாக பள்ளி முதல்வர் ஜனா தெரிவித்தார்.

தங்கள் தந்தையை கடைசியாக கடந்த மாதம் பார்த்ததாகவும், நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறியதாகவும், அவரது கனவை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் என்றும் 3 மகள்களும் தெரிவித்தனர். அவர்களின் கல்விச்செலவுக்கு உதவுவதாக பள்ளி இயக்குனர் அறிவித்தார். ராணுவ வீரர் வித்யார்த்தி மறைவுக்கு அப்பள்ளியில் நேற்று இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

Similar News