செய்திகள்

நடிகை மஞ்சுவாரியார் பா.ஜனதாவில் சேருகிறார்?

Published On 2016-09-17 07:56 GMT   |   Update On 2016-09-17 07:56 GMT
நடிகை மஞ்சுவாரியார் அரசியல் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மஞ்சுவாரியார் பா.ஜனதா கட்சியில் சேருவாரா? என்பது வருகிற 25-ந்தேதி தொடங்கும் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது தெரிந்து விடும்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் வருகிற 25, 26, 27-ந்தேதிகளில் பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இதையொட்டி கேரள மாநில பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் மேலிட தலைவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய கேரள நிர்வாகிகளுக்கு இப்போதே இந்தி மொழியினை சரளமாக பேச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு தொடங்கும் 25-ந்தேதி கோழிக்கோட்டில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது.

அதற்கு முந்தின நாள் நடிகை மஞ்சுவாரியாரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதியும் பிரதமர் முன்னிலையில் நடிகை மஞ்சுவாரியார் ராமாயண கதை என்ற நாட்டிய நாடகத்தை நடத்துகிறார்.

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை மஞ்சுவாரியார் தலைமையிலான குழுவினர் நடத்துகிறார்கள். இதற்காக மஞ்சுவாரியார் அடிக்கடி கட்சியின் மேலிட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இதனால் அவருக்கு பா.ஜனதா கட்சியின் மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர், பா.ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் திலீப்பை காதல் திருமணம் செய்த நடிகை மஞ்சுவாரியார் சமீபத்தில்தான் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்போது அவர், அரசியல் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மஞ்சுவாரியார் பா.ஜனதா கட்சியில் சேருவாரா? என்பது வருகிற 25-ந்தேதி தொடங்கும் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது தெரிந்து விடும். இதற்காக இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News