இந்தியா

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்ட்டர்: 2 ராணுவ வீரர்கள், 1 காவல் அதிகாரி உயிரிழப்பு

Published On 2023-09-13 22:00 IST   |   Update On 2023-09-13 22:00:00 IST
  • பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழப்பு.
  • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவை வழிநடத்துபவர் மற்றும் உயர் அதிகாரி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்.

கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தொன்சக் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஹிமான்யுன் முசாமில் ஆகியோர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தங்களின் உயிரை இழந்தனர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறை இணைந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

 

இந்திய ராணுவத்தின் 19 ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவுக்கு மன்பிரீத் சிங் வழிநடத்தும் அதிகாரியாக இருந்து வந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் பிரிவு தான் ராஷ்ட்ரிய ரைஃபில். இந்த பிரிவு ஜம்மு காஷ்மீரில் இயங்கி வருகிறது.

உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரியின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு விட்டன. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

இதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று அதிகாரிகள் பலத்த காயமுற்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற இரண்டாவது என்கவுண்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News