கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல்
- ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் சிக்கியுள்ளது.
- ரூ.63 லட்சம் இந்திய பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.
புதுடெல்லி :
இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ.) நேபாள எல்லை வழியாகச் நடந்த சூடான் நாட்டினரின் தங்கக்கடத்தலை முறியடித்துள்ளது. பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கடந்த 19-ந் தேதி இரவு மும்பைக்கு வரவிருந்த சூடான் நாட்டினரை பாட்னா ரெயில் நிலையத்தில் பிடித்தனர். அவர்களிடம் 40 பாக்கெட்டுகளில் 37.126 கிலோ எடையுள்ள தங்கம் மீட்கப்பட்டது.
20-ந் தேதி ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு பஸ்சில் சென்ற 2 சூடான் நாட்டு பெண்களை புனேயில் பிடித்தனர். அவர்களிடமிருந்து 5.615 கிலோ கடத்தல் தங்கமும், அதே நாள் பாட்னாவிலிருந்து மும்பைக்கு பயணித்த 2 சூடான் நபர்கள் மும்பை ரெயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்களிடம் 40 பாக்கெட்டுகளில் 38.76 கிலோ தங்கம் மீட்கப்பட்டது
மேலும் 20.2 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரூ.63 லட்சம் இந்திய பணம் மும்பையில் பிடிபட்டது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் (கோல்டன் டான் ஆபரேஷன்) மொத்தம் ரூ.51 கோடி மதிப்புள்ள சுமார் 101.7 கிலோ தங்கம் மற்றும் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ரூ.63 லட்சம் இந்திய பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுவரை 7 சூடான் மற்றும் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் தமிழக கடலோரப்பகுதியில் கடலுக்குள் வீசப்பட்ட தங்கம் கடலோர காவல் துறையால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது