குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 1000 பேர் கைது
- கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.
- சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடந்த சோதனை நடவடிக்கைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சட்டவிரோத வங்கதேசத்தினரைப் பிடிப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. அகமதாபாத் காவல்துறையினரால் 890 சட்டவிரோத குடியேறிகளும், சூரத் காவல்துறையினரால் 134 பேரும் பிடிபட்டனர்.
குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக குஜராத் காவல்துறை மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இவர்களில் பலர் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர், மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல்களாக பணிபுரிந்ததை கண்டுபிடித்தோம்.
அவர்களின் பின்னணி மற்றும் குஜராத்தில் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் விரைவில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் குஜராத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் தாங்களாகவே காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சட்டவிரோத குடியேறிகளுக்கு தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.