கதம்பம்

இன்றைய திருமணங்களில்...

Published On 2023-06-16 15:43 IST   |   Update On 2023-06-16 15:43:00 IST
  • மேடைக்கு வரும்போதே மணப்பெண் தோழிகளுடன் ஆடியபடி வரும் புதிய வழக்கம் ஒன்றும் தொடங்கியிருக்கிறது.
  • ஆடிக்கொண்டு மேடைக்கு வரும் மணப்பெண்ணை அசட்டு மாப்பிள்ளை, எழுத்தாளர் சுஜாதா சொல்வது போல, “ஙே” என்று பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இப்போது பெரும்பாலும் இங்கு நடப்பதெல்லாம் திருமணங்கள் அல்ல! சினிமா "சூட்டிங்"தான். உணர்வு பூர்வமான, அன்பு நிறைந்த, உறவுகளைப் பேணும் திருமணங்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது.

எனது சகோதரியின் திருமணத்தின் போது மாப்பிள்ளை தாலி கட்டுகையில், கையெடுத்துக்கும்பிட்டு எனது அக்கா விம்மி அழுத காட்சி இன்றும் எனது மனதில் நிற்கிறது. இப்போது நடக்கும் திருமணங்களில் எல்லாம் அத்தகைய உணர்வுபூர்வமான காட்சிகளைக் காண முடிவதில்லை.

தாலி கட்டுகையில் மணப்பெண் தனது அட்டியலையோ, நெற்றிப் பொட்டினையோ, உதட்டுச்சாயத்தையோ, எந்தவித பதற்றமும் இல்லாமல் "அஜஸ்ட்" பண்ணிக் கொள்வதைத்தான் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது.

ஒரு பணக்கார வீட்டுத்திருமணத்தில் மணப்பெண்ணின் அலங்காரத்திற்கான இன்றைய செலவில், ஐந்து ஏழைப் பெண்களுக்கான திருமணத்தையே நடத்திவிடலாம்.

மணப்பெண்ணிற்கான அலங்காரச் செலவு என்பது போய், இன்று உறவுக் கூட்டம் அத்தனைக்குமான அலங்காரம் என அச்செலவு விரிந்திருக்கிறது. மற்றையஆடம்பரச் செலவுகளின் விபரமும் அப்படியேதான்.

ஒரு புதிய உறவைத் தொடங்குவதற்கான நெகிழ்ச்சியோ, சிலிர்ப்போ இன்றைய கல்யாணங்களில் துளியளவேனும் இல்லை. முழுக்க முழுக்க சினிமா "சூட்டிங்" போலத்தான் திருமணத்தை நடத்துகிறார்கள்.

அதில் பாடல் காட்சிகள் இல்லை என்ற குறையையும் இன்று நீக்கத் தொடங்கி விட்டார்கள். மேடைக்கு வரும்போதே மணப்பெண் தோழிகளுடன் ஆடியபடி வரும் புதிய வழக்கம் ஒன்றும் தொடங்கியிருக்கிறது. ஆடிக்கொண்டு மேடைக்கு வரும் மணப்பெண்ணை அசட்டு மாப்பிள்ளை, எழுத்தாளர் சுஜாதா சொல்வது போல, "ஙே" என்று பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

அந்த ஆட்டத்திற்கும் ஒரு "தேசியகீதத்தை" அனைவருமாக இப்போது அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"மம்பட்டியான் மம்பட்டியான்..

மலையூறு நாட்டாம

மனசைக் காட்டு பூட்டாம

உன்னைப் போல யாரும் இல்ல மாமா "

என்று அற்ப ஆயுசில் மறைந்து போன ஒரு கொள்ளைக்காரன் பற்றிய பாட்டைப் பாடி, அதைத் திருமணத்தின் மங்களப்பாட்டாக்கி மகிழ்கிறார்கள்.

நம் தமிழினத்தார்க்கு ஏதோ நடந்துவிட்டது. அவர்களுக்குள் நல்லவற்றைப் புகுத்தப் படாதபாடு படவேண்டியிருக்கிறது.

கெட்டவைகளை அவர்கள் வெற்றிலை வைத்து வரவேற்கிறார்கள். எப்படித்தான் உருப்படுவோமோ தெரியவில்லை.

-இலங்கை ஜெயராஜ்

Tags:    

Similar News