செய்திகள்
ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

இந்த மாணவர் இதற்காகவே தாக்கப்பட்டார் - வைரலாகும் பகீர் தகவல்

Published On 2021-10-18 15:28 GMT   |   Update On 2021-10-18 15:28 GMT
வகுப்பறையில் பள்ளி மாணவர் கடுமையாக தாக்கப்பட இதுதான் காரணம் என கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


ருத்ராட்சம் அணிந்து இருந்ததால் அரசு பள்ளி மாணவர் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் தாக்கப்படும் மாணவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரை தாக்கிய ஆசிரியர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த வீடியோ சுதர்சன் நியூஸ் எனும் தனியார் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில், 'தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் இந்து மாணவர் ருத்ராட்சம் அணிந்து இருந்ததால் தாக்கப்பட்டார். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆசிரியர் மாணவர் கடுமையாக தாக்கியதோடு பள்ளியில் இருந்தும் வெளியேற்றினார்,' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ கடந்த வாரம் முதல் வைரலாகி வருகிறது. இதுபற்றிய செய்திகளும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் சிலர், வகுப்புகளை புறக்கணித்து வந்ததுள்ளனர். 



இதையடுத்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்களை அந்த பள்ளியின் இற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் கண்டித்தார். அப்போது மாணவர்களை முட்டி போட வைத்து பிரம்பால் தாக்கி, காலால் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அதே வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின் அந்த வீடியோ வைரலானது. 

மேலும், வீடியோவில் தாக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரின் பேரில், ஆசிரியர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியும் மாலைமலர் வலைதளத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று ருத்ராட்சம் அணிந்திருந்ததால் மாணவர் தாக்கப்படவில்லை என்பதும், ஆசிரியர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
Tags:    

Similar News