செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேலூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி பிரசாரம்

Published On 2019-07-20 05:50 GMT   |   Update On 2019-07-20 05:50 GMT
வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந்தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னை:

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்துக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சட்டசபை கூட்டம் நடந்ததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அங்கு செல்ல முடியாமல் இருந்தனர். இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிவடைகிறது.

எனவே அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நாளை முதல் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு தனது சொந்த ஊரான சேலம் செல்கிறார். திங்கட்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.

24-ந் தேதி (புதன்கிழமை) வேலூர் செல்லும் அவர் அங்கு ஒருநாள் பிரசாரம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளார். மேலும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் அவர் வழங்குகிறார்.

பின்னர் 29-ந் தேதி மீண்டும் அவர் வேலூர் சென்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 29-ந் தேதி முதல் 4 நாட்கள் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 26-ந் தேதி வேலூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு பிரசாரம் செய்ய உள்ளார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நாளை முதல் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய உள்ளனர்.
Tags:    

Similar News