செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

பாராளுமன்ற செயல்பாடு பற்றி மு.க.ஸ்டாலின் ‘சொடக்கு’ போடுவதா?- தமிழிசை கண்டனம்

Published On 2019-06-29 18:28 GMT   |   Update On 2019-06-29 18:28 GMT
37 எம்.பி.க்களின் பாராளுமன்ற செயல்பாடு பற்றி மு.க.ஸ்டாலின் சொடக்கு போட்டு மிரட்டல் விட்டதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல்லில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள்? பாருங்கள் என்பதை கையால் ‘சொடக்கு’ போட்டு மிரட்டல் விட்டதை பார்த்தோம். பாராளுமன்றம் நடக்கும்போது பல இருக்கைகள் காலியாக விட்டு விட்டு தி.மு.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது போன்று படம் பிடித்து இங்கே அதை குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி ஏதோ பெரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டதாக காட்டிக்கொள்கிறார்கள்.


பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மை நிலையை விளக்கவேண்டியது எங்கள் கடமை...

பெரும்பான்மையான பாரத தேச மக்கள் வாக்களித்து மீண்டும் மோடி அரசு அரியணை ஏற்றிருக்கும் சூழலில் துர்திர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாத சூழ்நிலையில் நமது மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் யாருமில்லையே என்பதே உண்மை நிலை.

சென்ற முறை தமிழ் நாட்டின் பிரதிநிதியாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமாரி தொகுதிக்கு மட்டும் 40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மக்கள் நல திட்டங்களையும் தமிழகம் முழுவதும் பல லட்சம் கோடி மதிப்பில் சாலை பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நலப்பணிகள் பல நடைபெற்றும் பல ஆண்டுகளாக பேசப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னையில் மருத்துவ பூங்கா மையம் இவையெல்லாம் வழங்கியபோதும், இந்த முறை ஒரு பா.ஜனதா உறுப்பினரை கூட தேர்ந் தெடுக்கவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு. அதனால்தான் தமிழகம் இழந்ததை சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் ஜன நாயக கடமை. அதே வேளையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி போல் மோடி அரசுக்கு தானே வாக்களித்தீர்கள் அவரை கேளுங்கள் என்று அநாகரிகமாக பேசாமல் தமிழகம் மத்திய அரசு ஜனநாயக ரீதியாக பங்கு பெறாததால் ஆளும் அரசில் தமிழக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பங்குபெற முடியாமல் இருப்பதுதான் உண்மை நிலை.

எல்லோருக்கும் எல்லாம் வழங்குவதை ஜனநாயகம் என்று பேசுபவர்கள் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது குடும்பத்தினருக்கு மட்டுமே குறிப்பிட்ட துறைகளை போராடி, வாதாடி ஆதாயம் பெற்று திகார் வரை சென்ற வரலாறு மக்களுக்கு தெரியும்.

மோடி அரசு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் ஜனநாயக கடமை ஆற்றும் என்பதை யாரும் சொல்லி தர தேவையில்லை, அதனால்தான் பெரும்பான்மை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News