செய்திகள்

கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Published On 2019-04-17 08:43 GMT   |   Update On 2019-04-17 08:43 GMT
கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid

சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.

தூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படவில்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் வந்ததால் அங்கு சென்றனர். பணம் எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.


ஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும்.

தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒரு நிருபர், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார் ஆகியோருடைய வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனை நடத்துகிறோம். பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். #Kanimozhi #ITRaid

Tags:    

Similar News