செய்திகள்

அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராகி விட்டனர்- ஜிகே வாசன்

Published On 2019-04-01 07:30 GMT   |   Update On 2019-04-01 08:00 GMT
அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் 100 சதவீதம் மனதளவில் தயாராகி விட்டதாக தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசினார். #LokSabhaElections2019 #TamilMaanilaCongress #GKVasan
தஞ்சாவூர்:

தஞ்சையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை பிரசாரம் செய்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்துள்ளேன். தஞ்சையில் இருந்து எனது பிரசார பயணத்தை தொடங்குகிறேன். தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுவை பாராளுமன்ற தொகுதி, 18 இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பெரிய வெற்றியை பெறுவார்கள். அவர்களுக்கு வாக்களிக்க மக்கள் 100 சதவீதம் மனதளவில் தயாராகி விட்டனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்துகின்றனர்.



தமிழகத்தில் பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகின்றனர். தஞ்சையிலும் ஏராளமான வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி உள்ளனர். வைத்திலிங்கம் எம்.பி. தஞ்சை பகுதி மக்களின் வளர்ச்சி பணிக்காக பாடுபட்டு வருகிறார். தற்போது த.மா.கா.விற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏழை- எளிய மக்களின் சின்னமாகும். இந்த சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சியே.

மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜனதா ஆட்சியும் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சை கீழவாசலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். அ.தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். #LokSabhaElections2019 #TamilMaanilaCongress #GKVasan
Tags:    

Similar News