செய்திகள்

இந்தியாவிற்கு வளர்ச்சி இல்லை, தளர்ச்சிதான்- மோடி அரசு மீது ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு

Published On 2019-03-28 06:54 GMT   |   Update On 2019-03-28 06:54 GMT
மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றும் தளர்ச்சி அடைந்திருப்பதாகவும், மதுரை பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
மதுரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள வண்டியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து பேசியதாவது:

இந்தியா 45 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. மோடி அரசால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை. தளர்ச்சிதான் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையை அதிகரித்தது தான் இந்த மோடி அரசின் சாதனை. இதனை நான் கூறவில்லை. ஆய்வு அறிக்கை ஒன்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் 6.1% வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மத்தியில் மோடியின் ஆட்சியை ஒழிக்கவே நீங்களும் இங்கு திரண்டு உள்ளீர்கள். ஏற்கனவே சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது , இந்த தேர்தல் அறிக்கை கதாநாயகன் மட்டுமல்ல, கதாநாயகியும் இது தான் என கூறினேன். இதில் கீழடியிலே அகழாய்வு தொய்வில்லாமல் தொடங்கப்பட்டு முறையாக நடத்தப்படும் என வாக்குறுதியினை அளித்தோம்.

இதனை  இங்கு சொல்ல காரணம், இந்த தொகுதியிலே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சு. வெங்கடேசன் இதற்கு முக்கியமான காரணமாவார். தமிழக எழுத்தாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். தமிழர்களின் புகழ் ஓங்க வேண்டும். இவர் மதுரையை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருவர் ஆவார். இவர்  பாராளுமன்றம் செல்வது எங்களுக்கு மட்டுமல்ல.  உங்களுக்கும் பெருமை ஆகும்.



அண்மையில் கூட பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.  அந்த விழா வெறும் அடிக்கல் நாட்டு விழா தான். அடிக்கல் நாட்டினால் போதுமா? அதற்கு பணம் ஒதுக்க வேண்டாமா? மருத்துவமனை தானாக வந்து விடுமா? ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உத்தரபிரதேசத்திற்கே தராதவர், மதுரைக்கா தரப்போகிறார்?

இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இப்போது தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன் இதை செய்வேன் என கூறுகிறாரே தவிர, ஒன்று கூட செய்யவில்லை. கழக தலைவர் மு கருணாநிதி ஆட்சியிலே, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், மினி பஸ்கள், என அனைத்தையும் தாய் உள்ளத்தோடு நடத்தினார். இன்று எடப்பாடி பேய் ஆட்சி நடத்துகிறார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்திற்கு வந்து செல்லும் மோடி அரசு , மதுரைக்கு என்ன செய்திருக்கிறது? என சிந்தித்து செயலாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

Tags:    

Similar News