செய்திகள்

சங்கராபுரம் அருகே வாகனசோதனையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சிக்கியது

Published On 2019-03-15 05:10 GMT   |   Update On 2019-03-15 05:10 GMT
சங்கராபுரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சம் 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

ரிஷிவந்தியம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் 33 பறக்கும்படை குழுவினர்கள், 33 நிலையான கண்காணிப்பு குழுவினரும் நெடுஞ்சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று இரவு சங்கராபுரம் மூரார்பாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் டிரைவரிடம் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கார் டிரைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் மாவட்டம் ஆரகனூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 35) என்பதும் குளிர்பானங்கள் மொத்தமாக எடுத்து சென்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்வார்.

அவர் கடைகளில் குளிர்பானங்கள் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தினை வசூலித்து செல்வது தெரியவந்தது. இருப்பினும் சதீஷ்குமார் வைத்திருந்த பணத்திற்கு ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தின மாலாவிடம் ஒப்படைத்தனர்.  #LSPolls

Tags:    

Similar News