செய்திகள்

திருச்சியில் ஒரே நாளில் அதிரடி பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.30 லட்சம் நகை-வெள்ளி கொலுசுகள் பறிமுதல்

Published On 2019-03-13 05:56 GMT   |   Update On 2019-03-13 05:56 GMT
திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி:

பாராளுமன்ற தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் படைகாத்து தலைமையில், பறக்கும் படையினர் பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறையில், சேலம் மாவட்டம் சொர்ணபுரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 16¼ கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.96 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பேரளி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆசிக்கான் தனது காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர் மற்றும் கியாஸ் அடுப்புகள் ஆகியவற்றை குன்னம் துணை வட்டாட்சியர் பழனிசெல்வன் தலைமையில் கைப்பற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலம் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த கூட்டுறவு சார்பதிவாளர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வேலூர் கிராமத்தை சேர்ந்த அமுதா தியோஸ் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 500 எடுத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோட்டாட்சியர் அந்த தொகையினை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை தாசில்தாரும் மணப்பாறை நத்தம் தனிதாசில்தாருமான இளவரசி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற ராஜேந்திரன், தேவசேனாபதி உள்ளிட்ட 5 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக காரில் வந்த கருமண்டபத்தை சேர்ந்த அந்தோணி நவீன் என்பவர் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 400 ரொக்கமாக எடுத்து சென்றார். அந்த பணத்திற்காக உரிய ஆவணமோ அல்லது ரசீதோ அவரிடம் இல்லை. விசாரணையில், எடமலைப்பட்டி புதூர்- மதுரை ரோட்டில் அவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதாகவும், வங்கியில் செலுத்த பணம் எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று, திருச்சி வயலூர் ரோட்டில் ரெங்காநகர் சோதனைச்சாவடியில் தனிதாசில்தார் (மணப்பாறை சிப்காட்) வசந்தா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்முகாநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருணாகரன் அவ்வழியாக காரில் வந்தார். அவரது காரை சோதனை செய்தபோது, ஒரு பையில் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த தொகைக்கான ஆவணம் ஏதும் அவரிடம் இல்லை. விசாரணையில், நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கட்டுவதற்காக பணத்தை எடுத்து செல்வதாக கருணாகரன் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் 2 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்து 400-ஐ திருச்சி மேற்கு தாசில்தார் ராஜவேலுவிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த தொகை ஒரு கவரில் ‘சீல்’ வைக்கப்பட்டு கருவூலத் தில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், வெள்ளி நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News