செய்திகள்

வாரிசு அரசியல் கூடாது- கமல்ஹாசன் திட்டவட்டம்

Published On 2019-03-08 10:04 GMT   |   Update On 2019-03-08 10:04 GMT
தனக்கு பின் தன் மகனோ,மகளோ, மைத்துனரோ வருவார்கள் என்ற அரசியல் கூடாது என்று மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசன், செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகளிர்தின ஒளியை கமல் ஏற்றி வைத்தார். கோவையை சேர்ந்த மருத்துவர் உஷா இளங்கோ, நடிகை கோவை சரளா ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்

நிகழ்ச்சியில் முதலில் பேசிய கமீலா நாசர் ‘மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் ஆண்களுக்கு சமமான சம்பளம் பெண்களுக்கும் வழங்குவோம். நவம்பர் 19 அன்று ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாட வேண்டும்’ என்றார்.

கட்சியில் சேர்ந்த நடிகை கோவை சரளா கூறியதாவது:-

‘போகிற போக்கை பார்த்தால் மக்கள் நீதி மய்யம் கட்சியே மகளிர் நீதி மய்யமாக மாறிவிடும் போல் தெரிகிறது. பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். பெண்கள் தமிழ்நாட்டில் நலிந்துபோய் உள்ளோம். தூர்வார தெரியாதவன் துப்புரவு தொழிலாளியை குறை சொன்னானாம். அதுபோல் நாம் இருக்க கூடாது.

ஆண்களை நம் கட்சி வாக்களிக்கச்செய்ய வேண்டும். சினிமாவில் இருப்பவர்கள் கட்சி ஆரம்பித்து என்ன கிழிப்பார்கள் என்றார்கள். கலைஞர்களுக்கு தான் மக்களின் மனநிலை தெரியும். அதனால்தான் உணர்வுப்பூர்வமாக கமல் கட்சியில் இணைந்துள்ளேன்’

இவ்வாறு அவர் பேசினார்.



மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

‘நான் அரசியல் பிரவேசம் செய்வதற்கு ஊக்கியாக இருந்தவர்கள் ஸ்ரீபிரியா, சரளா உள்ளிட்ட பெண்கள் தான். உங்க வீட்டில் எந்த ஆட்சி? சிதம்பரமா... மதுரையா... என கேட்பார்கள். என் வீட்டைப் பொறுத்தவரை மதுரை தான். நான் வீட்டில் வளரும்போது என்னை சுற்றி ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

பெண்களுக்கான உரிமைகள் இங்கு உள்ளது. பெண்கள் அதனை கைப்பற்ற வேண்டும். எனக்கு படிப்பு பள்ளிக்கூடத்தில் வரவில்லை. ஆனால் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன். அரசியல் வாதிகள் ஏழைகளை ஏழைகளாகவே வைத்துள்ளார்கள். அதுதான் அவர்களின் வெற்றிக்கான சாவி. வாக்குக்கு பணம் வாங்காமல் சரியாக வாக்களித்தால் நமக்கு லட்சக்கணக்கில் பணம் வந்து சேரும்.

இங்கு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டியது நமது கடமை. அரசு பணிகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணிக்கு வைப்பது சூழ்ச்சி. சட்டமன்றத்தில் மட்டும் அல்லாமல், பாராளுமன்றத்திலும் நமது குரல் ஒலிக்க வேண்டும். நமது கட்சி வேட்பாளர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மருத்துவர்கள் என இருப்பார்கள். கைக்கு அடக்கமான ஆளை வேட்பாளராக போடும் அரசியல் நடக்காது.

தனக்கு பின் தன் மகனோ, மகளோ, மைத்துனரோ வருவார்கள் என்ற அரசியல் கூடாது. நான் தமிழன் என்று வாய்ப்பு கேட்காதீர்கள். தகுதியை வைத்து வாக்கு கேளுங்கள். தமிழர்கள் என்பது விலாசம். திறமை இல்லாத தமிழனுக்கு எல்லா வாய்ப்பையும் அளிக்க வேண்டும் என்பது இல்லை. திறமை உள்ள தமிழனுக்கே வாய்ப்பு.’

இவ்வாறு கமல் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News