உள்ளூர் செய்திகள்

காரைக்குடியில் பயங்கரம்.. ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

Published On 2023-06-18 12:45 IST   |   Update On 2023-06-18 13:25:00 IST
  • வினீத் தனது நண்பர்களுடன் காரைக்குடி காவல் நிலையத்திற்கு கையெழுத்திடுவதற்காக வந்துள்ளார்.
  • கடந்த மார்ச் மாதம் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரைக்குடி:

மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது27). இவர் காரைக்குடியில் நடந்த ஒரு கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்த அவர் காரைக்குடியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக புது பஸ் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

வழக்கம்போல் இன்று காலை தெற்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். அங்கு கையெழுத்திட்டு விட்டு சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் அருகே ஒரு கார் வேகமாக வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு வேகமாக காரில் ஏறி தப்பிச் சென்றது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வினீத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்தவர்களுக்கும், வினீத்திற்கும் தொடர்பு உள்ளதா? முன்விரோதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News