கோத்தகிரியில் 23 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
- சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
- போலீசார் செல்போன் சிக்னலை வைத்து வாலிபரை மடக்கி பிடித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி சேட்லைன் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு ஆசிரியர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 சவரன் நகை கொள்ளை போனது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின்படி டி.எஸ்.பி குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு சிக்னல்களை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் ஒருவரின் அலைபேசி உரையாடல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே போலீசார் அந்த நம்பரை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் அவிநாசியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக அவிநாசிக்கு புறப்பட்டு சென்று அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கோத்தகிரி ஜக்கனார் பகுதியை சேர்ந்த முத்துவேல் என்கிற சிவா (வயது 45) என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கோத்தகிரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து முத்துவேல் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நான் அவிநாசியில் இருந்து சம்பவத்தன்று காலை கோத்தகிரி பகுதிக்கு வந்தேன். அங்கு நாள் முழுவதும் தங்கி இருந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டேன். இதில் கோத்தகிரி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்த வீட்டை தேர்வு செய்தேன்.
அதன்பிறகு அந்த பள்ளிக்கூடத்தில் நுழைந்து நள்ளிரவு வரை பதுங்கி இருந்தேன். அதன்பிறகு சுவரேறி குதித்து வீட்டினுள் புகுந்தேன்.
ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. எனவே அதே பகுதியில் உள்ள இன்னொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று நகையை திருடினேன். அதன்பிறகு அதே அரசு பள்ளிக்கு வந்து தூங்கினேன். அதிகாலை நேரத்தில் எழுந்து திருடிய தங்க நகைகளுடன் அவிநாசிக்கு சென்று விட்டேன். இவ்வாறு முத்துவேல் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.
கோத்தகிரி வீட்டில் 23 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு அவிநாசியில் பதுங்கி இருந்த குற்றவாளியை தனிப்படை போலீசார் சாதுரியமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்இன்ஸ்பெக்டர் ரகுமான்கான், பப்பிலா ஜாஸ்மின், காவலர் முஜாஹூர், சுரேந்தர், அலி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ், ஏட்டு ரமேஷ், பாட்ஸா, காவலர் அஜித், பழனிசாமி ஆகியோருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.