கோப்பு படம்
உத்தமபாளையத்தில் காதல் திருமணம் செய்த 45 நாட்களில் இளம்பெண் மர்ம சாவு
- உத்தமபாளையத்தில திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- அவர் வரதட்சணை கொடுமை யால் இறந்தாரா? என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி. வடக்குத் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் வினித் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சேர்ந்த சத்யா (வயது 21) என்பவரும் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
உத்தமபாளையத்தில் வினித் வீட்டிலேயே சத்யா வாழ்ந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து மயங்கி விழுந்து விட்டதாக கூறி சத்யாவை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.
இது குறித்து சத்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கணவர் குடும்பத்தினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாக்டர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்குதான் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவில் சத்யா எவ்வாறு இறந்தார்? என தெரிய வரும் என்று கூறினர்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அவர் வரதட்சணை கொடுமை யால் இறந்தாரா? என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.