உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் உப்பளத்திற்கு வேலைக்கு சென்ற பெண்களிடம் கத்தியை காட்டி நகைகளை பறிக்க முயற்சி-அக்கம் பக்கத்தினர் திரண்டதால் தப்பி ஓடிய 2 மர்ம நபர்கள்

Published On 2022-10-11 07:53 GMT   |   Update On 2022-10-11 07:53 GMT
  • முத்து இசக்கி சாகுபுரம் அருகே உள்ள உப்பளத்தில் வேலை செய்து வருகிறார்
  • மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் நகைகளை கழற்றி தருமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்தவர் இசக்கி குமார். கூலி தொழிலாளி.

இவரது மனைவி முத்து இசக்கி (வயது 43). சாகுபுரம் அருகே உள்ள உப்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று உப்பளத்திற்கு சென்றுள்ளார். இவருடன் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராஜ் மனைவி குடியரசு என்பவரும் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் முத்து இசக்கி, குடியரசு ஆகிய இருவரிடமும் நகைகளை கழற்றி தருமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து இசக்கி, குடியரசு இருவரும் பயத்தில் சத்தம் போட்டுள்ளனர்.

இதை கேட்டு பக்கத்து உப்பளங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலர் அங்கு வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த மர்ம நபர்கள் இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். பலர் துரத்திச் சென்ற போதும் அவர்களை பிடிக்க முடியவில்லை.

இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News