உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே எருமனூர் பகுதியில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2023-08-23 12:49 IST   |   Update On 2023-08-23 12:49:00 IST
  • எருமனூர் ஊராட்சிப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடலூர்:

விருத்தாசலம் அருகே எருமனூர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் ஊராட்சிப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மினிடேங் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மினிடேங்கிற்கு தண்ணீர் மின்மோட்டார் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மினிடேங்கிற்கு தண்ணீர் நிரப்பும் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மினி டேங்கிற்கு தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள பகுதிக்கு சென்றும், விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரை பிடித்து வந்தும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலை 10-நாட்களுக்கு மேலாக நீடித்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மின்மோட்டாரில் உள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் விருத்தாசலம்- முகாசபரூர் செல்லும் சாலையில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனைத்து வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இந்த சாலை மறியல் ஒரு மணி நேரம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

Tags:    

Similar News