உடுமலை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
- ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
- முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
உடுமலை :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு இந்த ஆண்டாவது சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும், ரெயில் வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. ஆனால் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரெயில்கள் குறைக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது ரெயில்கள் இயங்கி வருகின்றன.
திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை- - பொள்ளாச்சி, கோவை- - மதுரை பயணிகள் ரெயில்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க மறுப்பதுடன் பண்டிகை காலங்களில் கூட, தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வருவதில்லை.
கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும், சென்னையில் வசிக்கும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு ரெயில்கள் இயக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த பலனும் இல்லை.
இந்த ஆண்டாவது வருகிற 11ந் தேதி முதல் 14ந் தேதி வரையும், திரும்பி வருவோர் வசதிக்காக, 18ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும் பொள்ளாச்சி வழித்தடத்தில், கோவை - ராமேஸ்வரம் மற்றும் கோவை -தாம்பரம் இடையே 2 சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணியர் நலச்சங்கத்தினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.அதன்படி எர்ணாகுளம் -சென்னை இடையே ஜனவரி 12ந் தேதி திருப்பூர் மார்க்கமாக இயங்கும் வகையில் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவு துவங்கினாலும், தங்களுக்கான டிக்கெட் உறுதி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.அதாவது திருப்பூர், உடுமலையில் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர் வந்து டிக்கெட் பெற முயல்வோர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே அதிகமானோர் சொந்த ஊர் செல்வர். அதற்கு நிகராக பொங்கலுக்கு சொந்த ஊர் பயணிப்பதில்லை.அவ்வாறு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தாலும், கடைசி நேரம் ஏதேனும் ஒரு ரெயில் பொது பெட்டியில் பயணித்துக்கொள்கின்றனர். முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.