உள்ளூர் செய்திகள்

இணையவழி மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்- இயக்குனர் தகவல்

Published On 2023-03-28 10:23 GMT   |   Update On 2023-03-28 10:23 GMT
  • தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம்
  • விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும்

கிருஷ்ணகிரி,

இணையவழி மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் என, தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காய்கறி பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை மூலம் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

இதனை தவிர்த்து இணையவழி மூலமாகவோ, தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம். இணையவழி மூலமாக வாங்கப்படும் விதைகளினால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கோ அல்லது இழப்பிற்கோ எவ்வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் தனிநபர்கள் மூலம் நேரடியாக நாற்றுப்பண்ணைகளுக்கு மற்றும் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும் விதைகளுக்கு உரிய ரசீது அளிக்கப்படாததால் இவ்விதைகள் நம்பகத்தன்மை இல்லாமல், மறைமுகமாக போலி விதைகளை வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தவிர்த்து விவசாயிகளும், நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விதை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே விதைகளை வாங்க வேண்டும்.

விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் விதைகளை வாங்கும்போது நாள், விவசாயியின் பெயர், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பம் இட்டு தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News