உள்ளூர் செய்திகள்

கோடியக்கரை சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் மான்கள்.

கோடியக்கரை சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் வனவிலங்குகள்

Published On 2022-07-10 10:06 GMT   |   Update On 2022-07-10 10:06 GMT
  • ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும்.
  • நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2000-க்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான், 500-க்கும் மேற்பட்ட குரங்குகள், குதிரைகள், நரி, முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்கு சரணாலயத்தில் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 இயற்கையான குளங்க–ளும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த சரணாலயத்தில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும். அப்பொழுது செயற்கையாக கட்டபட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மழை பெய்ததால் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை.

இதனால் காட்டு விட்டு மான்கள் வெளியேறவில்லை.உணவும் தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததால் மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இது தவிர நரிகள், குதிரை, குரங்குகள் முயல்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சராணலயத்தில் காணப்படுகிறது.

இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது .இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வனத்துறையின் சார்பில் வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது. வனவிலங்குகளை சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள், மினி வேன், வழிகாட்டி பைனாகுலார் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வனவிலங்கு காண காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை உகந்த நேரம் என கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

Tags:    

Similar News