உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், கைதான பா.ஜனதா நிர்வாகி கார்த்திக்.


கோவில்பட்டி அருகே பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டது ஏன்?- கைதான பா.ஜனதா நிர்வாகி வாக்குமூலம்

Published On 2022-08-24 09:03 GMT   |   Update On 2022-08-24 09:03 GMT
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர். நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  • பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். ஊராட்சிமன்ற தலைவர்.

கொலை

நேற்று முன்தினம் பொன்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரை சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் (வயது 33) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் கார்த்திக் கூறியதாவது:-

கடந்த 15-ந்தேதி சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த கிராமசபை கூட்டத்தில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகளை திறக்க வேண்டும். பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் நிறைவேற்ற சொன்ன தீர்மானத்தினை நிறைவேற்றவில்லை.

இது தொடர்பாக அவரிடம் நாங்கள் கேட்க சென்ற போது பொன்ராஜ் எங்களை அவதூறாக பேசியது மட்டுமின்றி, அரிவாளை காட்டி மிரட்டினார்.

இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று தனியாக இருந்த அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் கொலையில் மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், உண்மையான குற்றாவளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி பொன்ராஜ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்.

தொடர்ந்து அவரது உடலுக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் பொன்ராஜ் உடல் அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? கிராம சபை கூட்டத்தில் நடந்த பிரச்சினை தான் காரணமா ? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News