தொப்புள் கொடியுடன் வாய்க்காலில் வீசப்பட்ட பெண் குழந்தை.
திட்டக்குடி அருகே கால்வாயில் பெண் குழந்தையை வீசி சென்ற கொடூர தாய் யார்? போலீசார் விசாரணை
- தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர்.
- பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள சிறுவர்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் பொம்மை மிதந்து செல்வதாக நினைத்து அதன் அருகே சென்று பார்த்தனர். ஆனால் அது பொம்மையல்ல குழந்தை என்பதை கண்டனர். அருகிலிருந்தவர்களிடம் சிறுவர்கள் தகவல் கூறினர். அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் வந்து பார்த்த பொழுது பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததை கண்டனர். உடனடியாக திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டு கரைபகுதியில் வைத்தனர் பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தண்ணீரில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்து வீசப்பட்டிருக்கலாம் என்பதும், கோழியூர் பகுதியை சேர்ந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது. வேறு யாரேனும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்று இருக்கிறார்களா என போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.