பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த 10-ஆம் வகுப்பு மாணவி கதி என்ன?
- சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டாளா? அல்லது பாறையில் மோதி உள்ளாரா? என்று தெரியவில்லை.
- இன்று காலை மீண்டும் சிறுமியை தேடும் பணி தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், ஓசூர் - மாலூர் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்திலிருந்து நேற்று இரவு 8 மணியளவில், சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி திடீரென கீழே ஆற்றில் குதித்து விட்டதாக அந்த வழியாக சென்ற ஒரு நபர் அலறல் சத்தம் எழுப்பினார்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு குவிந்தனர். மேலும் தகவல் அறிந்து பாகலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ள நிலையில் சிறுமி நீரில் அடித்துச் செல்லப்பட்டாளா? அல்லது பாறையில் மோதி உள்ளாரா? என்று தெரியவில்லை.
மேலும் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று காலை மீண்டும் சிறுமியை தேடும் பணி தொடங்கியது.
இதனிடையே அந்த சிறுமி பாகலூர் ஜீவா நகரை சேர்ந்த ரவி என்பவரது மகள் தேஜஸ்வினி (வயது16) என்பதும், அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில 10-ஆம் வகுப்பு படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர் ஏன் பாலத்திலிருந்து குதித்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.