உள்ளூர் செய்திகள்

மாளந்தூர் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் ஒரு மாத காலமாக குடிநீர் சப்ளை பாதிப்பு

Published On 2023-08-13 21:48 IST   |   Update On 2023-08-13 21:48:00 IST
  • அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் கிராமத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இக்கிராமத்துக்கு ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார சப்ளை நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக இக்கிராமத்துக்கு குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகின்றதாம்.

அறிவிக்கப்படாத இந்த மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குறைந்த அழுத்த மின் சப்ளையால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச மின் மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி உள்ளதை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தேவையான தண்ணீரை ஊராட்சி மன்றம் சார்பாக சப்ளை செய்ய இயலவில்லையாம். இதனால் கடந்த ஒரு மாத காலமாக போதிய அளவு குடிநீர் சப்ளை செய்யாததால் இக்கிராம பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு இக்கிராமத்துக்கு தேவையான மின்சாரத்தை போதிய அளவு சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News