உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

பகுத்தறிவு, சுயமரியாதைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது: கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2022-08-21 08:14 GMT   |   Update On 2022-08-21 08:14 GMT
  • ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
  • ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழர்களின் வாழ்வு, விடுதலை, பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வடக்கில் இருந்து எழுதப்பட்ட வரலாறு காரணம் ஆகும். இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள தியாகிகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இடம்பெற வில்லை. இவைகளை உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

தமிழர்களின் தொன்மை, வாழ்வு, பண்பாடு, கலாசாரம் போன்றவைகளை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மத்தியில் ஆலோசனை கேட்கும் அளவிற்கு நம்மிடம் பண்பாடு உள்ளது. அனைவருக்கும் வழிகாட்டி தமிழகம் தான். நாட்டின் சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

நமது தியாகம், வரலாறு, பண்பாடு போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது.

எந்த காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தி.மு.க. மற்றும் திராவிட கருத்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தால் வடக்கில் இருந்து யாரும் இங்கே கால் வைக்க முடியாது. இந்த உணர்வுடன் பழக வேண்டும். தமிழர்கள் வலிமையுடன் இருக்க நினைக்கும் ஆட்சி தி.மு.க.. இதற்கு நீங்கள் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுநாதன், மணப்பாறை அப்துல் சமது, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் முன்னாள் எம்.பி. லிங்கம், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணமுருகன், ஞான்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News