உள்ளூர் செய்திகள்

உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்சா விருது

Published On 2023-07-08 05:49 GMT   |   Update On 2023-07-08 09:52 GMT
  • உயிரை காப்பாற்றியவர்களுக்கு ஜீவன் ரக்சா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் (பொதுப் பிரிவு) உள்துறை அமைச்ச கத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீவிரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனிதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உயிரைக காப்பாற்றுவதற்கும், உத்தம் ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து இருக்கும் சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதற்கும், ஜீவன் ரக்சா பதக்கமானது மீட்பவருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றியதற்கும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அது போன்ற வீரதீர செயல்களில் ஈடுபட்டு ஒருவரின் உயிரை காப்பாற்றியிருந்தால் 2023-ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2021 -ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதிக்கு முன்னர் ,இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது.

இச்செயல்களை புரிந்த தகுதிவாய்ந்த நபர்கள், மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் மற்றும் மீட்கப்பட்டவரின் விபரங்களை சுயவிபர படிவத்தில் (அதிகபட்சம் 250 வார்த்தைகள்) பூர்த்தி செய்து அனுப்பவேண்டும்.

இதற்கான படிவத்தினை www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமா கவோ ஜூலை 14-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News