உள்ளூர் செய்திகள்

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. 

அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி-சட்டசபையில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-04-21 08:17 GMT   |   Update On 2023-04-21 08:17 GMT
  • ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
  • சட்டசபையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

ராஜபாளையம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் பேசியதாவது:-

முருகனின் அறுபடை வீடுகளையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலா துறையும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆன்மீக சுற்றுலா வெளிநாட்டவர்களுக்கும், வெளிமாநிலத்தவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் புதுமையாக இருக்கும்.

இதுபோல் ராமேசுவரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில் போன்ற மிகச்சிறப்பு மிக்க கோவில்களுக்கு ஒவ்வொரு ஊரிலிருந்தும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

சுற்றுலா துறையின் மூலம் தமிழ்நாட்டின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 53 தமிழ்நாடு ஓட்டல்களை முறையாக பராமரித்து தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்.

அனைத்து சுற்றுலா தலங்களிலும் தகவல் மையம் அமைக்க வேண்டும். அதிக பயணிகள் வரும் இடங்களை கண்டறிந்து, அரசு அவற்றிற்கு சுற்றுலா மையம் என்ற அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஒரு சுற்றுலா தலத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தலத்திற்கு நேரடி பஸ் வசதி இருக்க வேண்டும். மலை, கடல் போன்ற ஆபத்தான பகுதிகளில் உயிர் காக்கும் மருத்துவ வசதி உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதன் மூலம் வருவாயை அதிகரிக்கலாம். சுற்றுலா துறையும் மேம்படும். நமது கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியும் வளர்ச்சி அடையும்.

ராஜபாளையம் தொகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் அணைப்பகுதியையும், சஞ்சீவி மலையையும் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். மேலும் அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும்.

ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக தென்காசி ரோடு வரையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தொகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News