உள்ளூர் செய்திகள்

விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

தி.மு.க. விளம்பர ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

Published On 2022-09-24 08:22 GMT   |   Update On 2022-09-24 08:22 GMT
  • தி.மு.க. விளம்பர ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
  • தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

விருதுநகர்

விருதுநகர் பஸ் நிலையம் அருகே விருதுநகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழுக்கு மரியாதை செய்தவர் தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் விருதுநகர் சங்கரலிங்க நாடார். உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத்தை மதித்து தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அண்ணா. கருணாநிதி தனது குடும்ப நலனுக்காக கட்சியை கைப்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க. ஸ்டாலினை சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை விரிவுப்படுத்தி எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை கைவிட்டு விட்டனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.379 கோடியில் விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரூ447 கோடியில் விருதுநகர்-அருப்புக்கோட்டையில் கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், வத்திராயிருப்பில் புதிய தாலுகா அலுவலகம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பல கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

தாலிக்கு தங்கம், அம்மா கிளினிக் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டது. ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சி உள்ளது. தி.மு.க. ஆட்சி விளம்பர ஆட்சி. இது நிரந்தரமாகாது. விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும். நீங்கள் அ.தி.மு.க.விற்கு வாக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர செயலாளர் முகமது நயி னார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, முன்னாள் நகரசபை தலைவர் சாந்தி மாரியப்பன், யூனியன் துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News