சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா
- சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா அன்னப்பராஜா பள்ளியில் நடந்தது.
- 10 நாள் பயிற்சி முகாமில் மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த தோல்பாவைக் கூத்திற்கான பொம்மை செய்தல் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் வெற்றிபெற்று தேசிய அளவில் நடந்த போட்டியிலும் கலந்துகொண்ட அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்து, ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் பெற்றார்.
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக அரசு நடத்தும் தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சம்பத்குமார் ராஜா, ராஜபாளையம் மணிமேகலை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற யுவராணி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சார்பில் நடந்த சைக்கிள் போட்டியில் 3-ம் பெற்ற மாணவர் ஹேமந்த்சிவா, தேசிய மாணவர் படை சார்பில் மதுரையில் நடந்த 10 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், இளையபெருமாள் ஆகியோரும் மாணவ-மாணவிகளை பாராட்டி பேசினர்.