காரைக்கால் துறைமுகத்தில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி வாலிபர்கள் புகார் அளித்தனர்.
காரைக்காலில் ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் கிராம மக்கள் கண்ணீர் மல்க புகார்
- திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல்துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது .
- அதன் துகள்கள்காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர்
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு. பட்டினம் தொகுதியில் மேலவாஞ்சூர் கிராமத்தில் தனியார் கப்பல் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. கடந்த சில வாரமாக, இந்த துறைமுகத்தில் அளவுக்கு அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதன் துகள்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்றில் பரவியதால் கிராம மக்கள் உணவு உண்ண முடியாமலும், துணிகளை காயவைக்க முடியாமலும், மூச்சு திணறலாலும் பாதிக்கப்பட்டனர் இதனைக் கண்டித்து 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முன்தினம் துறைமுக வாயிலில் முற்றுகை போராட்டம் செய்தனர். இதனை அடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் மற்றும் சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனியார் கப்பல் துறைகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மேலவாஞ்சூர், கீழவாஞ்சூர், வடக்குவாஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் கருத்துகளை கேட்டனர். அப்போது கிராம மக்கள், தங்கள் வீட்டு சமையல் பாத்திரங்கள், துணிகள், வீடுகளில் படிந்த அளவுக்கு அதிகமான நிலக்கரி துகள்களை காட்டினர். இதற்கு நிரந்தர தீர்வு காணும்படி கண்ணீர்மல்க புகார் அளித்தனர்.
சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் உரிய ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.