உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் அருகே கிராமசபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணிப்பு

Published On 2023-10-02 09:14 GMT   |   Update On 2023-10-02 09:14 GMT
  • ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
  • சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது.

விழுப்புரம்:

திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் 500 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பகுதியினர் ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் சுடுகாடு அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்ற இந்த சுடுகாட்டுக்கு முறையான பாதை வசதி இல்லாத நிலையில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் மேல் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத வண்ணம் தடுப்புகள் அமைத்தும் ,செல்லும் வழியில் பள்ளங்கள் தோண்டியும் நிலத்தின் உரிமையாளர் இடையூறு செய்து வருவதாக தெரிய வருகின்றது .

இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்த நிலையில் 3 முறை சமாதான கூட்டம் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றும் இதுவரையில் சுடுகாட்டுக்கு செல்லுகின்ற பாதையை துறை சார்ந்த அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும்,ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக தெரிய வருகின்றது. இந்நிலையில் கருவம்பாக்கம் கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News